Mother Tongue Fortnight
தமிழ் மொழி வார நடவடிக்கைகள் :
இந்த நடவடிக்கைகள் மாணவர்களுக்குத் தமிழ் மீது உள்ள ஆர்வத்தை மேலும் பலப்படுத்தவும் தமிழ் கற்றலை மேலும் சுவைமிக்கதாக்கவும் நடத்தப்படுகின்றன.அதுமட்டுமல்லாமல் நமது பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றையும் அறிந்துகொள்ள அவை உதவுகின்றன.
சிறுவர் பாடல்கள்
ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் பாடல் பட்டறையில் கலந்து கொண்டனர். குழந்தை பாடல்கள் அளவில் சிறியதாகவும் அவற்றில் இடம்பெறும் சொற்கள் திரும்பத் திரும்பச் சொல்லக்கூடியதாகவும் இருக்கின்றன. மேலும் குழந்தைகள் வார்த்தைகளுக்கு ஏற்ப உடல் அசைவுகளை இணைத்து பாடலில் ஈடுபடுகின்றனர்.
வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களை திரும்பத் திரும்பச் சொல்வது மொழித் திறனை வலுப்படுத்த உதவுகிறது. இந்த அணுகுமுறையானது கேட்கும் திறன் மற்றும் ஒட்டுமொத்த மொழிப் புரிதலுக்குச் சுவாரஸ்யமாகவும் உயிரோட்டமாகவும் அமைகிறது.
நாடகம்
இரண்டாம் வகுப்பு மாணவர்கள் நாடகப் பட்டறையில் கலந்துகொண்டார்கள். அவர்கள் கதைகளுக்கு ஏற்ப நடித்து மகிழ்ந்தார்கள். படைப்பாற்றல் மற்றும் சுய வெளிப்பாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதுடன் நம்பிக்கையுடனும் பேசுவதற்கு நாடகம் குழந்தைகளை உற்சாகப்படுத்துகிறது.
உணவே மருந்து
மூன்றாம் வகுப்பு மாணவர்கள் இந்திய உணவில் இருக்கும் மருத்துவத் தன்மையைப் பற்றி விளக்கும் பட்டறையில் கலந்துகொண்டனர். மாணவர்கள் வெற்றிலை, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை போன்ற பொருள்களைத் தொட்டுப் பார்த்தது மட்டுமல்லாமல் அவற்றில் அடங்கியிருக்கும் மருத்துவ குணங்களையும் அறிந்துகொண்டனர்.
மாணவர்கள் சமையலுக்குப் பயன்படும் வாசனைப் பொருள்களைப் பற்றியும் அவற்றின் மருத்துவ குணங்களையும் அவற்றைச் சாப்பிடுவதன் முக்கியத்துவத்தையும் புரிந்துகொண்டனர்.
தாய்மொழி நடவடிக்கை நாள்
நான்காம் வகுப்பு மாணவர்கள் ஒருநாள் தாய்மொழி நடவடிக்கை நாளில் கலந்துகொண்டு இந்திய கலாசாரம் மற்றும் பண்பாடு பற்றிப் பல தகவல்களை அறிந்துகொண்டனர்.
அவர்களிடம் உள்ள கலைத்திறனை வெளிப்படுத்த கைவினைப்பொருட்கள் செய்தல் ,வண்ணம் தீட்டுதல் மேலும் பாரம்பரிய நடனம், விளையாட்டு ஆகியவற்றில் உற்சாகத்துடன் ஈடுபட்டு வெளிப்படுத்தினர்.
மின்னிலக்கச் சித்திரம்
ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மின்னிலக்க கேலிச்சித்திரம் என்ற பட்டறையில் கலந்துகொண்டனர். அவர்கள் ஒரு கதை உருவாக்கி சில செயலிகளின் வாயிலாக கேலிச்சித்திரங்களின் உதவியோடு கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்டி வகுப்பின் முன் படைத்தனர். மாணவர்கள் தகவல் தொழில் நுட்ப திறன்களுடன் படைப்பாக்கத்திறனையும் வெளிப்படுத்தினர்.
தமிழும் செயற்கை நுண்ணறிவும்
ஆறாம் வகுப்பு மாணவர்கள் தமிழும் நுண்ணறிவும் என்ற பட்டறையில் கலந்து கொண்டு ‘நுண்ணறிவின்’ நுணுக்கங்களைக் கற்றனர். பின் குழுக்களாகக் கதை உருவாக்கி தன்னம்பிக்கையுடன் வகுப்பின் முன் படைத்தனர். தகவல் தொழில் நுட்பத் திறன்களுடன் புத்தாக்கச் சிந்தனையும் படைப்பாக்கத்திறனையும் வெளிப்படுத்தினர்.
மாணவர்களுக்குத் தமிழ் மீது ஆர்வம் பெருக இந்த இரு வார தமிழ்மொழி வார நடவடிக்கைககள் ஒரு நல்ல முயற்சியாக அமைகிறது.